Monday, May 6, 2024
HomeLatest Newsகுழந்தை பெற்றுக் கொண்டால் 3 லட்சம்; சலுகைகளை அள்ளி வீசும் ஜப்பான் அரசு!

குழந்தை பெற்றுக் கொண்டால் 3 லட்சம்; சலுகைகளை அள்ளி வீசும் ஜப்பான் அரசு!

மக்கள்தொகையால் சிரமப்படும் இந்த நாடு, இப்போது தனது குடிமக்கள் குழந்தையைப் பெற்றெடுக்க  ஊக்குவுக்கும் வகையில் லட்சக்கணக்கான ரூபாய்களை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 

ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை குறைந்து வருவதாலும், சில காலமாக குறைந்து வரும் பிறப்பு விகிதத்தாலும் கலக்கமடைந்துள்ளது. நாட்டின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம், அறிவித்துள்ள சில சலுகைகள், மூலம் மக்கள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் என்று நம்புகிறது.

 ஜப்பான் டுடே வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​குழந்தை பிறக்கும் போது, ​​பெற்றோருக்கு, 4,20,000 யென் (ரூ. 2,53,338) வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை 500,000 யென்களாக (ரூ. 3,00,402) அதிகரிக்க சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கட்சுனோபு கட்டோ விரும்புகிறார். அவர் கடந்த வாரம் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இந்தத் திட்டத்தைப் பற்றி விவாதித்தார், இது 2023 நிதியாண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என ஜப்பான் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அரசு, ‘பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு மொத்த தொகை மானியம்’ என்று அளித்து வரும் போதிலும், ஜப்பானில் உள்ளவர்கள் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று விலைவாசி உயர்வு. ஜப்பானில் பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும், குழந்தை பிறப்பின் போது ஆகும் செலவின் தேசிய சராசரி 4,73000 யென்கள் ஆகும்.

குழந்தை பிறப்பின் போது ஏற்படும் செலவு தொகையை ஈடு கட்டும் வகையில் மானியத்தை அதிகப்படுத்தினாலும், குழந்தையை வளர்ப்பதற்கும் ஆகும் செலவும் மிகவும் அதிகமாக உள்ளது.

 ஜப்பான் அரசின் இந்த உதவித் தொகையினால், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் பெற்றோர்களுக்கு சராசரியாக 30,000 யென்கள் கையில் இருக்கும். ஒட்டுமொத்தமாக, புதிய பெற்றோர்கள் தங்கள் குடும்பம் வளரும்போது கொஞ்சம் கூடுதல் பணம் இருந்தால் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும், 80,000 யென் அதிகரிப்பு என்பது இதுவரை இல்லாத அதிகபட்ச மானியமாக இருக்கும்.

 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஜப்பானில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்துள்ளன. மக்கள் தொகை குறைவு எதிர்காலத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால் இந்த எண்ணிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக, இந்த விவகாரம் நாட்டின் கொள்கை மற்றும் அரசியல் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு 8,11,604 பிறப்புகள் மற்றும் 14,39,809 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 6,28,205 மக்கள் தொகை குறைந்துள்ளது. சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் GG பிரஸ்ஸிடம் கூறியதாவது, கடந்த ஆண்டு கருவுறுதல் விகிதம் குறைந்ததற்கு, குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் 20 வயதுடைய பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது காரணம் ஆகும்.

Recent News