அடுத்த சில மாதங்களில் 231 வகையான மருந்துகளை இலங்கை பல்வேறு வழிகளில் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தெரிய வந்துள்ளது.
சீன மனிதாபிமான உதவி, உள்ளூர் உற்பத்திகள், அவசரகால கொள்முதல், ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் கடன் மானியங்கள் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய கடன் வசதி ஆகியவற்றின் ஒரு பகுதியாக மருந்துகள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பஞ்சு, சேலைன், வெறிநாய் எதிர்ப்பு மருந்து, பாம்பு விஷத்திற்கான மருந்து, பிரசவத்திற்குப் பின் ஏற்படும் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் நாட்டில் உள்ளதாக மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டி.ஆர்.கே.ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கம் மருந்துகளுக்காக பெரும் தொகையை செலவிட்டுள்ள நிலையில், மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அதேவேளையில், நாளாந்தம் துல்லியமான தகவல்களை மதிப்பிட்டு, மருந்து பற்றாக்குறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
புற்றுநோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இதய நோயாளிகள் அவர்களின் நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் மற்றும் தகுந்த மருந்துகளை நாட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை கருவிகள் குறிப்பாக ஒரு வருடத்திற்கு தேவையான சத்திரசிகிச்சை உபகரணங்களை முன்கூட்டியே கணக்கிட்டு தேவையான உத்தரவுகளை வழங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.