இலங்கை சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு நாளையுடன் (டிச.26) 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இந்த வகையில், சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்ச்சிகள் பல நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நாடளாவிய ரீதியிலும், மாவட்ட மட்டத்திலும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி ஊடகப் பணிப்பாளர் ஜானக ஹந்துன்பதிராஜா தெரிவித்தார்.
இதன் பிரதான நிகழ்வு காலி சுனாமி நினைவுத்தூபியில் நாளை (26) காலை நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்த 50ம் இலக்க என்ஜினை இணைத்த ரயிலொன்று நிகழ்வு நடைபெறும் பகுதியை வந்தடையும் எனவும், சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குழுவொன்றும் அந்த ரயிலில் வருகை தருவார்கள் எனவும் ஹந்துன்பதிராஜா தெரிவித்தார்.
சுனாமி அனர்த்தம் மற்றும் பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுமத்ராவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி பேரழிவின் காரணமாக இலங்கையின் 14 கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.இந்த அனர்த்தத்தினால் சுமார் 35,000 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 5000 பேர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது