அமெரிக்காவின் ஆளில்லா விண்வெளி விமானம் ஒன்று 6-வது முறையாக விண்ணில் செலுத்தப்பட்டு ஏறக்குறைய 908 நாட்கள் பயணம் முடிந்து வெற்றியுடன் பூமிக்கு திரும்பி சாதனை படைத்து உள்ளது.
இதுபற்றி போயிங் விமான நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், எங்களது போயிங் நிறுவனம் தயாரிப்பில் உருவான எக்ஸ்-37பி சுற்று வட்டப்பாதை சோதனை வாகனம் (ஓ.டி.வி.) விண்வெளியில் புதிய சாதனை பதிவாக, 908 நாட்கள் தனது சுற்று வட்டப்பாதையில் பயணித்து விட்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசா விண்வெளி அமைப்பின் கென்னடி விண்வெளி தளத்தில் நேற்று வந்து தரையிறங்கி உள்ளது.
இதற்கு முன்பு சுற்று வட்டப்பாதையில் 780 நாட்கள் பயணித்து இருந்தது. தனது முந்தின சாதனையை தற்போது முறியடித்து உள்ளது என மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.
சூரிய சக்தியால் இயங்க கூடிய இந்த விண்கலம் 9 மீட்டர் (29 அடி) நீளம் கொண்டது. தனது முந்தின 5 பயணங்களில் சுற்று வட்டப்பாதையில் 224 நாட்கள் முதல் 780 நாட்கள் வரை பயணம் செய்துள்ளது.
இதன்படி, மீண்டும் பயன்பட கூடிய திறன் பெற்ற இந்த விண்கலம், 6-வது முறையாக பயணம் மேற்கொண்டு அதனை வெற்றியுடன் முடித்து உள்ளது.
இதுவரை மொத்தம் 3,774 நாட்கள் விண்வெளியில் செலவிட்டு உள்ளது. 130 கோடி மைல்கள் தொலைவுக்கு விண்வெளியில் பறந்து சென்றுள்ளது. இந்த பயணத்தில் அரசு மற்றும் தொழிற்சாலை நிறுவனங்களுக்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு உள்ளது.
சமீபத்திய பயணம், அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் அமெரிக்க விமான படை அகாடெமி மற்றும் பிற விசயங்களுக்கான பரிசோதனைகளில் ஈடுபட்டு உள்ளது.
இதுதவிர, விண்வெளியில் விதைகளை நீண்ட நேரம் வைத்து பரிசோதனை செய்வதற்கான விளைவுகளை பற்றி அறியும் பரிசோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.
இதனால் வருங்காலத்தில் விண்வெளியில் நிரந்தர தளங்களை நிறுவுவதற்கான திட்டத்திற்கான இலக்கை எட்டவும் ஆய்வு நடந்து உள்ளது.