Thursday, May 16, 2024
HomeLatest Newsஇலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 150 வைத்தியர்கள்!

இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 150 வைத்தியர்கள்!

கடந்த சில வருடங்களாக சட்டவிரோதமாகவும், சட்டரீதியாகவும் வெளிநாடுகளுக்குச் சென்று தமது பொறுப்புக்களைப் புறக்கணித்த விசேட வைத்தியர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த குழுவைச் சேர்ந்த சுமார் 30 மருத்துவர்கள் இந்த ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், தற்போது இந்த மருத்துவர்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியர்கள் உட்பட அரச ஊழியர் ஒருவர் வெளிநாடு சென்றால் அதற்கு பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சரின் அனுமதி கட்டாயம் என மருத்துவ சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பிரியந்த அதபத்து தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்கள் மீதும், கடமைகளைப் புறக்கணிக்கும் வைத்தியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நிறுவனத் தலைவருக்கு அதிகாரம் இருப்பதாகவும், அந்த அதிகாரத்தின்படி, கறுப்புப் பட்டியல் வெளியிடும் திறன் அவருக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவர்களின் பெயர்கள் பொது நிர்வாக அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாட்டில் தங்கியிருக்கும் விசேட வைத்தியர்களுக்கு அபராதம் விதித்து அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்து, இலங்கை மருத்துவ சபையின் பதிவை ரத்து செய்து, பிரித்தானிய மருத்துவ சபைக்கு அறிவிக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியர் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுமக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்கும் வைத்தியர்கள் வெளிநாடு சென்று தமது பெயர்களை பிரித்தானிய வைத்திய சபைக்கு அறிவித்ததன் பின்னர் தமது கடமைகளை புறக்கணித்துள்ளமையினால் தொடர்ச்சியாக பணிக்கு செல்லும் ஏனைய வைத்தியர்களும் வேலை இழக்க நேரிடும் என பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recent News