Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇலங்கையில் மேலும் 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்! இந்தியா திட்டம்

இலங்கையில் மேலும் 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்! இந்தியா திட்டம்

இலங்கையில் மேலும் 100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்க அனுமதி கோரியுள்ளதாக டெல்லியில் அமைந்துள்ள இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சுமார் 211 இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.

இந்த விநியோக கட்டமைப்பை மேலும் விஸ்தரிக்கும் முகமாகவே புதிய 100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் குழு நேற்று டெல்லியில் அமைந்துள்ள இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்தது. இதன் போது கலந்துரையாடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெளிவுப்படுத்திய இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் (வர்த்தகம்) சுதீப் ஜெயந்த் மேலும் கூறுகையில்,

இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் 100 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட எரிபொருள் தேவையை ஈடுச் செய்வதற்கு சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் 7 மில்லியன் மெட்றிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியிருந்தோம்.

இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற எரிபொருளினால் கூடுதல் வருமானங்கள் கிடைப்பதில்லை. எவ்வாறாயினும் இந்திய அரசின் அயலகத்திற்கு முதலிடம் என்ற கோட்பாட்டின் கீழ் இலங்கைக்கு டெல்லி முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்ற நிலையில் இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனமும் அவசர நிலைமையில் இலங்கைக்கு உதவுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து எதிர்பொருள் விநியோக கட்டமைப்பு தவிர்ந்து வேறு துறைகளிலும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.

குறிப்பாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்.பி.ஜி) துறையில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலும் கவனத்தில் கொண்டுள்ளோம். இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Recent News