Sunday, May 19, 2024
HomeLatest Newsகனடாவில் கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி! அவசரகால நிலைமை பிரகடனம்

கனடாவில் கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி! அவசரகால நிலைமை பிரகடனம்

கனடாவின் மத்திய மாகாணமான சஸ்கட்ச்வான் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பத்து பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

கனடாவின் ஜேம்ஸ் க்ரீ நேஷன் மற்றும் வெல்டொன் ஆகிய பகுதிகள் உள்ளிட்ட 13 இடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

31 வயதான டேமியன் சன்டர்சன் மற்றும் 30 வயதான மயில்ஸ் சன்டர்சன் ஆகியோரே இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும்,இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் கறுப்பு நிற வாகனமொன்றை பயன்படுத்தியுள்ளதாகவும், ஆயுதங்களை கையில் வைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதல் காரணமாக ஜேம்ஸ் க்ரீ நேஷனில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சிலரை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதன்போது ஏனையவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் கனேடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பதுடன் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Recent News