எலிகளின் தாக்கத்தை குறைப்பதற்கு அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரின் முதல்வர் அலுவகம் புதுவித அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது
குறித்த அறிவிப்பில் “எலிகளின் தாக்கத்தை தணிக்கும் இயக்குநர் பணிக்கு ஆள் தேவை” என குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Big apple என்று அழைக்கப்படும் நியூயார்க் நகரின் உண்மையான எதிரியான எலிக்கு எதிராக போராடும் அரசு ஊழியர் நியமிக்கப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகின்றது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மிகுந்த உந்துதல் கொண்டவர்களாகவும் ”சற்றே ரத்த வெறிகொண்டவராக இருக்க வேண்டும்” என்றும் இந்த வேலைவாய்ப்பு விளம்பர வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் ஆண்டுக்கு 1,70,000 அமெரிக்க டாலர் சம்பளம் பெறுவார் எனவும் தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.1.38 கோடி எனவும் குறிப்பிட்ப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில்,
“இது தினமும் 24 மணி நேரமும் பணியாற்றுக்கூடிய வேலை. வேலைக்கு விண்ணப்பிப்பவர் சகிப்புத்தன்மை, நகர மக்களுடன் தொடர்பில் இருத்தல், உற்சாகம், தந்திரமான மனநிலை, துணிச்சல், சமூகத்தினரிடம் நேர்மறையான கண்ணோட்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
எலிகளைக் குறைக்கும் உத்திகளை உருவாக்குதல், அதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கை முன்முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியன இந்த புதிய ஊழியரின் பொறுப்புகளில் அடங்கும்.
“எலிகள் இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை வெறுக்கும். ஆனால், 88 லட்சம் நியூயார்க் நகர வாசிகள் மற்றும் நகர அரசாங்கம் ஆகியவை எலிகளின் எண்ணிக்கையை குறைத்தல், நகரில் தூய்மையை அதிகரித்தல், மற்றும் கொள்ளைநோய்கள் பரவலைத் தடுத்தல் ஆகிய பணிகளுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்றுவர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நியூயார்க்வாசிகளுக்கு ஓர் எலி என்ற விகிதத்தில் அங்கு எலிகள் உலவுகின்றன. நியூயார்க் நகரின் தெருக்கள், சுரங்கப் பாதைகளில் கிட்டத்தட்ட 20 லட்சம் எலிகள் நடமாடுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்நகரில் எலிகளின் எண்ணிக்கை அதிக அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது குறித்து நகரின் சேவை மையத்துக்கு வரும் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 67 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டின் அமெரிக்க வீட்டுவசதி கணக்கெடுப்பு தரவின் புதிய தகவலின்படி, நகரத்தை ஒரளவு எலிகளிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மெட்ரோ நகர்ப்புற பகுதிகளில் அதிக எலிகள் காணப்படும் இடங்களில் நியூயார்க் மூன்றாவது இடம் பிடித்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எலிகள் தொல்லையால் தூக்கத்தைத் தொலைத்த பாஸ்டன் மற்றும் பிலடெல்ஃபியா ஆகிய பெருநகரங்கள் நியூயார்க்கை விடவும் அதிகமான எலித் தொல்லைக்கு உள்ளாகியுள்ளன.