பால் கறப்பதற்காக பண்ணையில் ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மாடுகள் தீயில் சிக்கி உடல் கருகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள சவுத்போர்க் எனப்படும் மிகப்பெரிய பால் பண்ணையிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பண்ணை நேற்றைய தினம் திடீரென தீ பிடித்துள்ளதுடன், சிறிது நேரத்தில் தீ பண்ணை முழுவதும் பரவியத்துடன் பெரிய வெடி விபத்தாக மாறி பயங்கர சத்தம் எழுந்துள்ளது.
அத்துடன் அங்கு கரும் புகை சூழ்ந்ததுடன், பால் கறப்பதற்காக பண்ணையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மாடுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
பால் பண்ணையில் ஏற்பட்ட இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த போதிலும் பண்ணையில் இருந்த 18 ஆயிரம் மாடுகள் இறந்துள்ளன.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவரும் ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் தீவிர சிகிச்சையும் பெற்று வருகின்றார்.
மின்சாதனங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து டெக்சாஸ் தீயைணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டனை மையமாக கொண்டு விலங்குகள் நல வாரியம் 2013 ஆம் ஆண்டு கொட்டகை மற்றும் பண்ணையில் ஏற்படும் தீ விபத்தை கண்காணிக்க தொடங்கிய நிலையில் அமெரிக்காவில் அதிக கால்நடை உயிரிழப்பை ஏற்படுத்தியது இந்த விபத்துதான் என கூறியுள்ளனர்.