இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, “குடியுரிமை திருத்த சட்டத்தின் அறிவிப்பைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்.இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் அனைத்து சமூகங்களும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா அரசால் கடந்த 2019-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிஏஏ மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். 4 வருடங்கள், 3 மாதங்கள் கழித்து கடந்த வாரம் இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆதாயத்திற்காக பாரதிய ஜனதா தற்போது அமல்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 3 மாநிலங்கள் இதை செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளது.ஆனால் சிஏஏ முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. விண்ணப்பிக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை. ஒருபோதும் சிஏஏ திரும்ப பெறப்படாது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.