உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை ஒருமாதங்களை கடந்த நிலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த மாசி மாதம் 24ம் திகதி உக்ரைன் மீதான வலிந்து மேற்கொள்ளப்பட்ட போர் 53 நாட்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கின்ற நிலையில் உக்ரைன் நிலப் பரப்பில் இருந்து மக்கள் போர் அகதிகளாக வெளியேறிய வண்ணம் இருக்கின்றார்கள் என்றும் அவர்கள் அயல் நாடுகளை நோக்கியும் வேறு ஐரோப்பிய நாடுகளை நோக்கியும் படையெடுத்த வண்ணம் இருக்கின்றார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை தமக்கு கிடைத்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் சுமார் 4,869,019 மில்லியன் உக்ரைனிய மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளதாகவும் மேற்படி எண்ணிக்கை உக்ரைனை விட்டு வெளியேறி வேறு நாடுகளை நோக்கி பயணித்த போர் அகதிகளைக் குறிப்பதாகவும் இவற்றை விட உள்நாட்டில் இடம்பெயர்ந்திருப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகம் என தெரிவித்ததோடு இவர்களில் 215,000 போ் உக்ரைனில் வாழ்ந்த மூன்றாம் நாட்டவர் என்றும் அவர்களும் நாட்டை விட்டு இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்பட்ட போதிலும் மக்கள் தமது வாழ்வில் மீண்டும் ஒரு உயிர்ப்பு நிகழும் என்ற நம்பிக்கையினை உருவாக்கிக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருப்பதாகவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.