செழுமை நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் இருந்து 100MW சூரிய சக்தி உற்பத்தியை தேசிய மின்னழுத்தத்திற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஊக்குவிப்பு கருத்திட்டத்தின் கீழ் இணைப்பதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் இன்று (28) காலை கைச்சாத்திடப்பட்டன.
திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
மாகாண சபை சார்பில் மாகாண சபையின் பிரதம செயலாளர் துசித பி. வனிகசிங்க மற்றும் கேபிடல் க்ரோப் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஆர்ப் டச் சிசி (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டங்களுக்கான முதலீடு 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள். மாகாண சபைக்கு சொந்தமான 279 பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளின் கூரைகளும் மாகாண சபைக்கு சொந்தமான அனைத்து அரச கட்டிடங்களின் கூரைகளும் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
இதன் சிறப்பு என்னவென்றால், சம்பந்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதால் கிடைக்கும் இலாபத்தில் 20% அரசுக்கு வரவு வைக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் தற்போது பாவிக்காத நிலையில் உள்ள பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளும் இதன் ஊடாக பயனடையலாம்.
இதேவேளை, இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, மாகாண சபையின் பிரதம சட்ட அதிகாரி தர்ஷன வீரசேகர உட்பட பலர் கலந்து கொண்டனர்