Saturday, May 4, 2024
HomeLatest Newsதலை சுற்றவைக்கும் தலதா மாளிகையின் மின்கட்டணம்!

தலை சுற்றவைக்கும் தலதா மாளிகையின் மின்கட்டணம்!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் கடந்த மாதம் மின்சார கட்டணம் 30 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பழைய மின்சார முறையின் கீழ் ஐந்து இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள கோவில்களுக்கு கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் மின்கட்டணம் வெகுவாக அதிகரித்துள்ளதால், அதற்கான நிவாரண அமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அஸ்கிரி மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்ததன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தற்போது 550% ஆக அதிகரித்துள்ள மின்கட்டண அறவிடுதல் முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதன்படி, உயர்த்தப்பட்ட மின் கட்டணம் விரைவில் குறைவடையும். மத மற்றும் தொண்டு நிறுவனங்களும் தங்கள் மின்சாரப் பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்.

ஒகஸ்ட் 10-ம் திகதி மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியபோது, ​​முன்பு 1.75 ரூபாயாக இருந்த மின் அலகின் விலை 75 ரூபாயாக உயர்ந்தது. இலங்கையில் சுமார் 48,000 மத மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன.

பொது நோக்கத்திற்கு 32 ரூபாய் அறவிடுகின்றோம். ஒகஸ்ட் முதல் பொது நோக்கத்தின் கீழ் இந்த நிறுவனங்களையும் எடுத்துக் கொள்ளும் போது, ​​அதிகரித்து வரும் மின் கண்டனம் குறைவடையும்.

மேலும், அதிகரித்துள்ள கட்டணத்தை குறைக்கும் வகையில், மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சார சபைக்கு தெரிவித்துள்ளோம்.

90 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 30 யூனிட்டுக்கு குறைவாக இருந்தால் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் அறவிடப்படுகிறது. எங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 32 ரூபாய் செலவாகிறது. மேலும் 60 யூனிட்டுகளுக்கு குறைவாக இருந்தால் ஒரு யூனிட்டுக்கு 12 ரூபாய் அறவிடப்படுகிறது. 90 யூனிட் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு 16 ரூபாய் அறவிடப்படுகிறது.

அதாவது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு தேவையான மானியத்தை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். என்றார்.

Recent News