பாகிஸ்தானில் அமைந்துள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இரண்டு யானைகளை பரிசாக வழங்கி வைக்க இலங்கை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் கராச்சி மிருகக்காட்சிசாலையில் ஆபிரிக்க யானை நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்து, பாகிஸ்தானுக்கு இரண்டு பெண் யானைகளை பரிசாக வழங்குவதாக இலங்கை தெரிவித்துள்ளது என லாஹூரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி யாசின் ஜோயா, அந்நாட்டின் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இதனால் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் இரண்டு யானைகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இலங்கை இரண்டு யானைகளை பாகிஸ்தானுக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதில் ஒன்று கராச்சி மிருகக்காட்சிசாலைக்கும் மற்றைய யானை லாகூருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017 மே மாதத்தில் உயிரிழந்த சுஷீயின் மரணத்திற்குப் பின்னர் லாகூர் மிருகக்காட்சிசாலையில் யானைகள் இருக்கவில்லை என்று இலங்கை தூதரக அதிகாரி யாசின் ஜோயா தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் யானைகள் குறித்த அறிவிப்பு இலங்கை அரசாங்கத்தினால் எதிர்வரும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் இலங்கை தூதரக அதிகாரி யாசின் ஜோயா மேலும் தெரிவித்துள்ளார்.