Wednesday, January 1, 2025
HomeLatest Newsமக்களுக்கு எதிரியாக இருக்க விரும்பவில்லை: இராஜினாமா தொடர்பில் சியம்பலாப்பிட்டிய உருக்கம்

மக்களுக்கு எதிரியாக இருக்க விரும்பவில்லை: இராஜினாமா தொடர்பில் சியம்பலாப்பிட்டிய உருக்கம்

எனக்கு இரண்டாவது தடவையாக பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதன் பின்னர் மக்கள் என்னை எதிரியாக கருதுகின்றனர். பொது மக்களுக்கு எதிரியாக நான் விரும்பவில்லை. இதன் காரணமாக பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் வகித்த பதவிகளிலிருந்து விலகி எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தனர். இதன் ஒரு நிலைப்பாடாக நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவி சுயாதீனமானது என்ற போதிலும், ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமையால் அதன் தார்மீக உரிமை சம்பந்தமான கேள்விகளுடன் எனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்கின்றேன்.

இருப்பினும் புதிய சபாநாயகர் தெரிவின் போது எமது கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் மீண்டும் என்னை பிரதி சபாநாயகராக தெரிவு செய்தமையால் பிளவுகளுக்கு வித்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். ஆனால் வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர் எதிர்க்கட்சிகளிடையே ஒரு இணக்கப்பாடு காணப்பட்டது.

அதாவது இடைக்கால அரசொன்று வருமாயின் அதிலும் பிரதி சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளிடம் காணப்படுகின்றமை ஜனநாயகத்திற்கு உகந்தது என சுட்டிக்காட்டியமையாலேயே மீண்டும் அந்த பதவியை ஏற்க நான் நேர்மையாக விரும்பினேன்.

ஆனால் இறுதி தருணத்தில் எதிர்க்கட்சிகளினால் மற்றொரு பெயரும் பரிந்துரைக்கப்பட்டமையால் இரகசிய வாக்கெடுப்பிற்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதன் போது ஆளுங்கட்சி வெளிப்படையாகவே என்னை ஆதரிப்பதாகவும் அறிவித்தது. நாட்டில் இடம்பெறுகின்ற அரச எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு இதுவரைக் காலமும் பொது மக்கள் பக்கமிருந்து செயற்பட்ட எனக்கு இரண்டாவது தடவையாக பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதன் பின்னர், அந்த மக்கள் என்னை எதிரியாக கருதுகின்றனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவ தலைவனாக அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான், ஊர்வலங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள், கண்ணீப்புகைப்பிரயோகங்கள், பொலிஸாரின் தாக்குதல்கள் மற்றும் சிறைவைப்புக்கள் என பல சம்பவங்களை எதிர்கொண்டுள்ளேன்.

ஆனால் இவ்வாறு மக்கள் தாங்க முடியாது அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் எதிரியாக நான் ஒருபோதும் விரும்பவில்லை.

எனவே பொறுப்பு வாய்ந்த பல பதவிகளை வகித்த எனக்கு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணமாகவே இதனைக் கருதுகின்றேன். இதன்படி பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து உடனடியாக விலகுகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News