நாட்டின் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றஉறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்னவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மத்திய குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் முன்வரிசையில் ஏழாவது ஆசனம் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.