நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்குள் தீர்வை காணமுடியாமல் போய்விட்டால், நாடாளுமன்றம் அதன் கௌரவத்தை இழந்துவிடும். நாடாளுமன்றத்தின் பலமும் கேள்விக்குரியாகிவிடும்.’
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
‘ பிரதி சபாநாயகர் தரப்புக்கு ஆளுங்கட்சியால் வேட்பாளர் ஒருவரை நிறுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருவரும் எதிரணியில் இருந்துதான் போட்டியிட்டனர். தனக்கு பெரும்பான்மை உள்ளதா என்பது அரசுக்கு தெரியவில்லை. பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் தகுதியானவர்கள்.
எனவே, வாக்கெடுப்பு முடிவை ஏற்று செயற்படுவோம். ராஜபக்சக்களை வெளியேறுமாறுதான் மக்கள் கோருகின்றனர். நாடாளுமன்ற நடவடிக்கைகளை நாம் ஒன்றிணைந்து முன்னெடுப்போம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இந்தவாரமும் தீர்வை தேட முடியாமல் போனது. அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னர் தீர்வை தேட வேண்டும்.
இல்லையேல் நாடாளுமன்றம் கௌரவத்தை இழந்துவிடும். அதிகாரமும் இல்லாமல் போய்விடும். எனவே, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, முடிவை எடுக்கவும்.’ – என்றார்.