நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும் அதிலிருந்து மீள்வதற்கான உதவிகளை சர்வதேச நாடுகளிடம் இலங்கை கோரிக்கொண்டிருக்கும் தருணத்திலும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதானது நாட்டில் ஒரு சரியான சட்டம், ஒழுங்கு இல்லை என்பதை அரசு வெளிப்படுத்துகின்றது.
இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நாட்டில் போர் முடிவுக்கு வந்த பிறகு பல சர்வதேச நாடுகளால் அவசரக்காலச் சட்டம் இலங்கையில் தொடரக் கூடாது என்றும், அது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன் காரணமாக கடந்த காலங்களில் அவை சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக மீளப்பெறப்பட்டன.
எமது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் வரிசையில் இருந்து எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள், காஸ் உட்பட ஏனைய தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியாத யுகமொன்றே உருவாகியுள்ளது.
எதிர்வரும் சில மாதங்களில் இந்த நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தருணத்தில் உலக வங்கி உட்பட பல சர்வதேச நாடுகளிடம் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுப்படுவதற்கான தீர்வுகளை இலங்கை உதவி கோரி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையால் நாட்டின் மீது உள்ள அபிப்பிராயத்தை சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இழக்க நேரிடும். இதனால் எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியாக கிடைக்கும் அனைத்து உதவிகளும் தாமதமாகும் அபாயமும் எழுந்துள்ளது.
இந்த அவசரகால பிரகடனத்தால் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் குறைவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் டொலர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்.
எனவே, அரசு எதிர்காலத்தில் இவ்வாறான முடிவுகளை எடுக்கும்போது நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சியினர், முப்படையினர், சிவில் அமைப்பினர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் இன்று நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களைத் தீவிரவாதிகள் முன்னெடுக்கவில்லை. அரசு ஆட்சிக்கு வர வேண்டுமென வாக்களித்த மக்களால்தான் முன்னெடுக்கப்படுகின்றன.
மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு அரசு செவிசாய்த்து மக்களுடன் கலந்துரையாடி ஒரு சிறந்த தீர்வை வழங்குவதே சிறந்ததாகும். எனவே, அவசரகாலச் சட்டத்தை அரசு உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும்” – என்றுள்ளது.