சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை எங்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாத சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
முழங்காவில் விநாயகர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட விநாயகர் வெற்றிக்கிண்ணம் என்னும் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் பொருளாதாரம் இன்று பாரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது இந்த வீழ்ச்சிக்கு காரணம் ஆட்சியாளர்களின் திட்டமிடப்படாத பொருளாதாரக் கொள்கையும் அவர்களிடம் இருக்கிற இன ரீதியான மத ரீதியான சிந்தனைகளும் இராணுவ சிந்தனையோடும் செயற்பட்டதால் தான் அடிப்படை பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருக்கிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் வாழ முடியாமல் மக்கள் தெருக்களில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
காலிமுகத்திடலில் இளைஞர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் இந்த வேளையிலும் இன்றைய தினம் இலங்கையின் இராணுவத்தளபதி யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதிக்கு வந்து வந்து அடாத்தாக கட்டப்படும் பௌத்த விகாரையை பார்வையிட்டு சென்றிருக்கிறார்.
இளைஞர்கள் தமிழ் பொருளாதார ரீதியில் இந்த நாடு சீரழிந்து கொண்டிருக்கிற நிலையிலும் தமிழர் தேசங்களில் பௌத்த அடையாளங்களை நிறுவுவதில் அரச இயந்திரம் குறியாகவே இருக்கிறது.
எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற இன ரீதியான ஒடுக்குமுறையினை காலி முகத்திடலில் இருக்கும் இளைஞர்கள் எவ்வாறு உணர்ந்து கொள்ளப் போகிறார்களோ என்று எனக்கு தெரியவில்லை .
தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும் ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட கொண்டே இருக்கிறது இங்கு இருக்கின்ற பல இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் .
இப்போதும் எங்கள் இளைஞர்களை விசாரணைக்கு அழைக்கிறார்கள் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் இவற்றையெல்லாம் கடந்துதான் இந்த மக்கள் இந்த மண்ணில் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது .
பல வளர்ந்த நாடுகளின் இராணுவ அளவீடுகளை விட இலங்கை தன்னுடைய மனித அளவுக்கு மேலால் அளவுக்கு மீறிய இராணுவப் படைகளையும் தன்னுடைய துணை படைகளையும் வைத்திருப்பதனால் தான் இலங்கையில் எவ்வளவு பெரிய பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பதை இன்னும் ஒரு சிங்களத் தலைவரும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.
யுத்தம் என்ற போர்வையிலே கடந்த 30 ஆண்டுகள் எங்கள் மீது புரியப்பட்ட யுத்தத்திற்காக சர்வதேச சமூகத்திடமும் பல நாடுகளிடமும் கடன் அடிப்படையிலும் மானிய அடிப்படையிலும் இலங்கை பெற்றுக்கொண்டவற்றை எல்லாம் யுத்த தளபாடங்களாகவும் இராணுவ பெருக்கமாகவும் மாற்றிக் கொண்டது.
அதி வேகபாதைகளை நிர்மாணிப்பதாக குறிப்பிட்டார்கள் தாமரை கோபுரம் என்கின்ற பெயரில் ராஜபக்ச குடும்பத்திற்கான மைதானங்களை அமைத்துக் கொண்டார்கள் திட்டமிடப்படாத எந்த வகையிலும் நாட்டிற்கு பயன்படாத பொருளாதார சிந்தனைகளைக் கொண்ட இலங்கை அதல பாதாளத்தை நோக்கிச் நகர்ந்துள்ளது.
வஞ்சிக்கப்பட்ட நாங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நாங்கள் காலி முகத்திடலில் உள்ள இளைஞர்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் இந்த மண்ணிற்கு சொந்தமானவர்கள் இது தமிழர்களுடைய தேசம் வடக்கும் கிழக்கும் இணைந்த இந்த மண்ணிலே உங்களுக்கு ஒரு அரசியல் உரிமை இருக்கிறது.
அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்கிற ஒரு சிங்கள இளைஞனுடைய குரலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் அதை ஒரு சிங்களத் தலைவர் அல்லது போராடுகின்ற சகோதர சகோதரிகளே நீங்கள் தமிழர்களை தேசிய இனமாக அடையாளப் படுத்துகின்ற நாளை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் விஜயசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிறீரஞ்சன் உபதவிசாளர் எமிலியாம்பிள்ளை விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு அருட்தந்தையர்கள் பாடசாலையின் அதிபர்கள் பூநகரி உதைபந்தாட்ட லீக் நிர்வாகத்தினர் மற்றும் பெருந்திரளான இரசிகர்களுடன் போட்டிகள் நடைபெற்றன.