மலேஷியாவை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவரிற்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிரகித்தல் குறைபாடு உடைய இவர் மீது 12 வருடங்களிற்கு முன்பு, அதாவது 2010ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கின் காரணமாக இந்த தண்டனை நிறைவேற்றம் அரங்கேறியுள்ளது.
நேற்றைய தினம் சிங்கப்பூரின் சங்கீ சிறைச்சாலையில் வைத்து மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நாகேந்திரனின் சகோதரர் நவின் குமார் குறிப்பிடும் போது,
நாகேந்திரனின் உடல் இறுதிக் கிரியைகளிற்காக மலேசியா அனுப்பப்படவுள்ளதாகக் கூறியுள்ளார். 34வயதான இவரின் தண்டனையை ரத்து செய்யுமாறு இறுதிக்கட்டத்தில் இவரது தாயின் வேண்டுகோளை சிங்கப்பூர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
நாகேந்திரன், நீதிமன்ற அறையில் இருந்து அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கைகோர்க்க நீதிமன்றம் அனுமதித்தது.
இந்தநிலையில் துாக்கிலிடப்படுவதற்கு முன்னர் நாகேந்திரன் தமக்கு விருப்பமான ஆடையை அணிந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டில் 42.7g ஹேரோயின் போதைப்பொருள் தொடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர் சிங்கப்பூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் மரண தண்டனை வழங்கப்படுதல் அடிக்கடி சாதாரணமாக நடைபெறுவது சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்பட்டு வருவதோடு, குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களிற்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு உட்பட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாகேந்திரனின் வழக்கு சிங்கப்பூரின் இந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் சர்வதேச நீதி நிறுவனங்கள் இந்த வழக்கில் நாகேந்திரனிற்கு மரண தண்டனை வழங்கப்படக் கூடாது என ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஆனால் சிங்கப்பூர் நீதிமன்றம் இவற்றை, ‘நீதியையும் சட்ட ஒழுங்குகளையும் துஷ்பிரயோகம் செய்யும் முயற்சிகள்’ எனக் கூறிபுறக்கணித்து விட்டது.
நாகேந்திரனிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் எம்.ரவி இந்த மரண தண்டனை தொடர்பாக தனது கருத்தை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாகேந்திரனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், ‘நீங்கள் எங்களை உடைக்கலாம். ஆனால் எங்கள் போராட்டத்தைத் தோற்கடிக்க முடியாது, மரண தண்டனைக்கு எதிரான எமது போராட்டம் தொடரும்’ எனக் கூறியுள்ளார். கடந்த திங்கட்க்கிழமை மரண தண்டனைக்கு எதிராக சிங்கப்பூரில் ஹாங் லிம் பார்க் எனும் இடத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
மலேஷியா அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுமக்கள் சேவை அமைப்புகள் அனைத்தும் நாகேந்திரனின் தண்டனையை ரத்து செய்யுமாறு சிங்கப்பூர் நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அத்தோடு பிரித்தானிய முன்னணி தொழிலதிபர் ரிச்சர்ட் ப்ரன்சன் உம் தனது ஆதரவை நாகேந்திரனிற்கு வழங்கியிருந்தார்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுத் தலைவர் சிங்கப்பூர் நீதிமன்றத்திற்கு எழுதிய வேண்டுகோளில், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கு மரண தண்டனை விதிப்பது என்பது சர்வதேச மனித உரிமைகள் சார் சட்டங்களிற்கு முரணான செயல் எனக் கூறியுள்ளார்.
மேலும் இன்னமும் மரண தண்டனையை நீக்காத நாடுகள், அதனை ஆகப்பெரும் தீங்கிழைத்த குற்றங்களிற்கு மாத்திரமே வழங்க முடியும். உதாரணமாக, நோக்கத்துடன் திட்டமிட்டு கொலை செய்தல் போன்ற குற்றங்களிற்கே தவிர, போதைப்பொருள் கடத்துதல் போன்ற குற்றங்களிற்கு வழங்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தியிருந்தார்.
அடுத்து தட்சனாமூர்த்தி கந்தையா என்பவரையும் போதைப்பொருள் கடத்தல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிங்கபூரின் மரண தண்டனை வழங்கப்படும் வீதம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.