அமெரிக்க (America) விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) கடந்த 2023 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பிய ‘சைக் 16’ விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக லேசர் சிக்னலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ‘சைக் 16’ விண்கலமானது, செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே நிலைநிறுத்தி தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சைக் விண்கலத்தில் டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் (DSOC) பொருத்தப்பட்டிருப்பதால், இதன் மூலம் லேசர் தகவல் பரிமாற்றத்தை விஞ்ஞானிகள் பரிசோதித்து வருகின்றனர்.இந்நிலையில், ‘சைக் 16’ விண்கலத்தில் இருந்து அனுப்பப்பட்ட லேசர் சிக்னல் வெற்றிகரமாக பூமிக்கு வந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அதாவது, பூமியில் இருந்து சுமார் 14 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து இந்த லேசர் சிக்னல் வந்திருப்பதாகவும், இது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான தூரத்தைவிட, ஒன்றரை மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது.இவ்வாறு ‘சைக் 16’ விண்கலம் அனுப்பிய லேசர் சிக்னல், பூமிக்கு வெறும் 8 நிமிடங்களில் வந்தடைந்ததாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.இதன் மூலம் தகவல் தொடர்பு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், விண்வெளியில் வேற்றுகிரகவாசிகளின் தகவல் பரிமாற்றத்தை கண்டறிய இது உதவும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.