Monday, April 29, 2024
HomeLatest Newsபதுளை மாவட்டத்தில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை..!

பதுளை மாவட்டத்தில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை..!

நாட்டில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடுமையான தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பதுளை, ஹாலிஎல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதற் கட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

கடும் மழை காரணமாக பசறை, ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில பகுதிகள் ஏற்கனவே மண் சரிவு அபாயம் அதிகரித்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக இப்புதிய எச்சரிக்கை 3 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மழை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதால், அனர்த்த அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் எமது நிலையத்தினூடாக வழங்கப்பட்ட மழைமானிகளைப் பயன்படுத்தி மழையின் அளவு குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும். மழை வீழ்ச்சி அதிகரித்து அனர்த்தம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்குரிய நடவடிக்கைகளை கிராம உத்தியோகத்தர் உட்பட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் அறிவித்து மேற்கொள்ள வேண்டும்.

குடியிருப்புகளைச் சுற்றி மழை நீர் தேங்க விடாதிருக்க வடிகால்களை முறையாக சுத்திகரித்து பராமரிக்க வேண்டும்.வீட்டிற்கு அருகில் உள்ள ஆபத்தான மரங்களை உரிய அதிகாரிகளின் அனுமதியுடன் வெட்டி அகற்றல் வேண்டும். இடி,மின்னல் தாக்கம் குறித்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அத்துடன், ஆற்றங் கரைகளில் வாழும் மக்கள் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மண் சரிவு அனர்த்தங்களின் போது பாதுகாப்பு பெறுவதற்கான பயிற்சிகளை வழங்கியுள்ளமையால் அவற்றை கருத்திற் கொண்டு செயற்படுவது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

Recent News