Saturday, January 4, 2025
HomeLatest Newsபோராட்டம் சரியான இலக்கை நோக்கி நகருகின்றதா? மஹ்தி சந்தேகம்

போராட்டம் சரியான இலக்கை நோக்கி நகருகின்றதா? மஹ்தி சந்தேகம்

தற்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு காரணமானவர்கள் யார்? இப்போராட்டம் சரியான இலக்கை நோக்கி நகருகின்றதா? என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம்.மஹ்தி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சிக் காலத்தில் மொட்டுக் கட்சியே மத்திய வங்கி ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது. எந்த ஒரு அடிப்படையும் இன்றி இன, மத வாதங்களை தூண்டி குழப்பங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தியது.

ஆனால், மொட்டின் உண்மை முகத்தை அறியாதவர்கள் 69 இலட்சம் வாக்குகளையும் வழங்கினார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு 20 ஆவது திருத்தத்தையும் அவர்களே நிறைவேற்றிக் கொண்டார்கள்.

அதே மொட்டுக் கட்சி மத்திய வங்கி மோசடிக்கு எதிராக எது வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திகன, ஏப்ரல் 21 என பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கூட கண்டுபிடிக்கவில்லை.

அதே நேரம் நாடாளுமன்ற சூழலில் நடைபெற்ற சில சம்பவங்கள் பின்வரும் வினாக்களை எழுப்புகின்றன.

தற்போதைய ஆட்சியை உண்டாக்கியவர்கள் யார்? இவர்கள் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்காதவர்கள் யார்? நாட்டின் ஸ்திரத் தன்மையையும் பொருளாதாரத்தையும் வீழ்த்தியது யார்?

அனைத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக குரலெழுப்பும் எதிர்க் கட்சியினரையும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்தால் அடுத்து எதை சாதிக்கப் போகிறோம்?

225 பேரும் வீடு சென்றால் அடுத்து சாத்தியமான சட்ட ரீதியான அனுகுமுறைதான் என்ன?

இந்தப் போராட்டம் வெற்றியடையும் தருணத்தை அண்மித்தால் அடுத்து நாம் பேசப் போவதும் செய்யப் போவதும் என்ன?

எல்லோரிலும் குற்றத்தை சுமத்தி தீர்வின்றி பயணித்தால் இப்போராட்டம் வெற்றி பெறுமா? எனும் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார்.

Recent News