அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் முக்கியமாக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்திலும் கடந்த 27 நாட்களாக தொடர்ச்சியாக தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய எதிர்ப்பு பேரணியை நடத்தியிருந்தனர்.
“அரசாங்கத்தை அகற்றுவோம்! சிஸ்டத்தை மாற்றுவோம்!”. “வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறும், நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பாகக் கருதப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களது எதிர்ப்பு பேரணி பாராளுமன்ற நுழைவு வீதியை அடைந்ததும் தொடர்ந்து முன்னோக்கி செல்ல முடியாதவாறு பாரிய தடுப்பு வேலிகளை அமைத்ததுடன் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இதனால் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன் பொலிஸாரால் கண்ணீர்புகைக் குண்டு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான நிலையை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் நாடாளுமன்றம் செல்லும் வீதியில் சற்றுமுன் ஒன்றுகூடி அங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சற்றமுன் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதி ஹொரு கோ கிராமம் எ மாணவர்களால் பெயர் இடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த ஆர்ப்பாட்டமானது இன்று இரவு முழுவதும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை அங்கே தற்போது கொட்டில்கள் அமைக்கப்படுவதோடு ஒளி, ஒலி அமைப்புக்களும் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.