வறிய நாடுகளின் அரசாங்கங்கள் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பான மானியங்களை வழங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
உலகளாவிய ரீதியாக அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினை சமாளிப்பதில் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்ராலினா ஜிஓஜிவா தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு நேரடியாக அவர்களுக்கு மானிய அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்.
பல நாடுகள் இவ்வாறான மானிய வசதிகளை மக்களுக்கு செய்துள்ள போதிலும், அது போதியளவில் இல்லை.
வாழ்க்கை செலவு நெருக்கடியினை சமூகத்தின் பிரிவாக மிகவும் வறிய மக்கள் எதிர்நோக்குவதுடன், தற்போது உணவு மற்றும் எரிசக்தி விலைகளுடன் போராட வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.
அவ்வாறு மானியங்கள் வழங்கப்படாத பட்சத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான போராட்டங்களை போன்று ஏனைய நாடுகளிலும் வலுப்பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இந்தநிலையில், உலகளாவிய ரீதியாக பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையில் வைத்திருப்பது மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்தல் என்பனவற்றிற்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை வழங்கும் என அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் முன்வந்துள்ளதை போன்று, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கும் தமது உதவிகளை வழங்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் சீனாவின் கடல் வலையில் இலங்கை சிக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் உள்ள சீன தூதரகம் தமது ட்விட்டர் கணக்கின் ஊடாக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சர்வதேச சந்தையில் 47 சதவீதம் கடன் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
அதில் 10 சதவீத கடனையே சீனாவுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.