மக்களின் போராட்டம் ராஜபக்ச அரசைச் சார்ந்த அனைவரும் பதவி விலக வேண்டும் என்பதே, என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அப்படியான கோரிக்கையை முன்வைக்கின்ற போது வெறுமனே அமைச்சரவையை மாற்றியமைத்து தொடர்ந்து தானும் தன்னுடைய சகோதரர்களும் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்பதே அவர்களின் திட்டம். அது தவறான ஒரு எண்ணம்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மக்களினுடைய போராட்டம் அந்த குடும்பம் முற்றுமுழுதாக வெளியேற வேண்டும் என்பதே. அதை செய்தாலன்றி நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படப் போவதில்லை.
நாட்டில் தற்போது பொருளாதாரம் மிகவும் சீரழிந்த நிலையிலேயே இருக்கின்றது.
அதை திருத்தி அமைப்பதற்கு முயற்சி எடுக்க ஆரம்பமாகின்ற இந்த வேளையிலே அந்த சீரழிவுக்கு முற்றுமுழுதாக காரணமாக இருந்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்.
ஆகையால் அவர்கள் முழுதும் பதவி விலக வேண்டும் என்ற கோஷம் தான் மக்களிடத்தில் எழுந்துள்ளது.
இன்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மகிந்தவின் உத்தியோகப்பூர்வ இல்லமான தங்காலை – கார்ல்ட்டன் இல்லம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் பதவி விலக வேண்டும். அனைவரும் இருந்து கொண்டு கண்துடைப்பு நாடகம் ஒன்றை நடத்துவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
இதன்போது, புதிதாக அமைக்கப்படும் இடைக்கால அமைச்சரவையில் நீங்கள் இணைந்து கொள்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டபோது,
புதிய அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பு இடம்பெறாது. அப்படியான அமைச்சரவையில் நாங்கள் இடம்பெறமாட்டோம்.
ஒட்டுமொத்தமாக ராஜபக்ச குழுவினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.