Friday, January 10, 2025
HomeLatest Newsஅவசரகால சட்டம் நடைமுறை – மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

அவசரகால சட்டம் நடைமுறை – மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

தற்போது நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்குவதற்காக நாளைய தினம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சில தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பொலிஸ்;மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், அமைதியாகவும் சாதாரண பொலிஸார் நடவடிக்கைகளினால் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான பின்னணியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயமாகும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளது.

அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் பொது அமைதியின்மை ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும் அதனால் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் அதன் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் ஊடாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தீர்வு காண முடியாது என அமெரிக்கா உள்ளிட்ட 35க்கும் அதிக நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அல்லது அறிக்கைகளை விடுத்து அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் சகல பாதுகாப்பு படையினரின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

சகல பாதுகாப்பு தரப்பினரையும் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News