இந்திய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே 4 நாள்கள் சுற்றுப்பயணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவுக்குச் சென்றுள்ளாா்.
இந்தியா மற்றும் தான்சானியா இடையே ராணுவ உறவை பலப்படுத்த ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தான்சானியா நாட்டுக்கு 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியா மற்றும் தான்சானியா இடையேயான ராணுவ உறவுக்கு அக்டோபா் 2003-இல் போடப்பட்ட ஒப்பந்தம் அடித்தளமிட்டது.
கடந்த ஜூன் மாதம் அருஷா நகரத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டிணைவு பாதுகாப்பு ஒப்பந்தக் குழு கூட்டம் இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தியது.
இந்நிலையில் ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் தான்சானியா நாட்டு பயணம் ஏற்கெனவே இந்தியாவுடனான ராணுவ உறவை மேம்படுத்துவது மட்டுமின்றி வருங்காலத்தில இரு நாடுகளின் ராணுவ உறவை பலப்படுத்துவதற்கான முன்னெடுப்பாக அமையவுள்ளது.
மேலும் தான்சானியா நாட்டின் குடியரசுத் தலைவா் சமியா சுலுஹு ஹசன், பாதுகாப்புத் துறை அமைச்சா் ஸ்டொ்கோமெனா லாரன்ஸ், தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஜேக்கப் ஜான், ராணுவ தளபதி சயீதி ஹமிசி சயீதி உள்ளிட்டோருடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.
தான்சானியா தலைநகரம் தாா் எஸ் சலாம் மற்றும் ஜன்ஜபீா், அரூஷா ஆகிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களையும் அவா் பாா்வையிடவுள்ளாா். பயணத்தின்போது தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் சிறப்புரையாற்றி அக்கல்லூரியின் தலைவரும் ராணுவத் தளபதியுமான வில்பா்ட் அகஸ்டினுடன் கலந்துரையாடவுள்ளாா்.
ராணுவத் தளபதி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் தாா் எஸ் சலாம் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2-ஆவது இந்தியா- தான்சானியா பாதுகாப்புக் கண்காட்சி இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ கருவிகளின் வளா்ச்சி குறித்து எடுத்துரைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.