உக்ரைனில் முதன்முறையாக பிரித்தானிய படையினர் களமிறக்கப்படவுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த வாரம் உக்ரைன் சென்றிருந்த கிராண்ட் ஷாப்ஸ் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசியுள்ளார்.
இராணுவத் தலைவர்களுடன் புதிய திட்டங்களைப் பற்றி விவாதித்த பின்னரே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் ஒரு குழுவினை மிக விரைவில் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிரித்தானிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் உக்ரைனில் உற்பத்தியை முன்னெடுக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் உக்ரைனுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் முடிவை தாம் வரவேற்றாலும், உற்பத்தியை உக்ரைனில் துவங்குவது சிறப்பாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமன்றி விளாடிமிர் புடினின் படைகளிடமிருந்து கருங்கடலில் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதில் பிரித்தானிய கடற்படையின் போர்க்கப்பல்களை பயன்படுத்துவதன் சாத்தியம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும்
அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.