போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சை முடிவதற்குள்ளாகவே மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பின்லாந்து பிரதமர் சன்னா மரின், புகைப்படம் ஒன்றினால் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
பின்லாந்து நாட்டின் பிரதமராக சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சன்னா மரின், கடந்த 2019-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதவியை ஏற்ற போது அவருக்கு வயது 34. உலகின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்த வாரம் சன்னா மரின் தனது வீட்டில் நண்பர்கள் மற்றும் பிரபலங்களுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் அவருக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இது தனது தனிப்பட்ட வாழ்க்கை எனவும், தனது தனிப்பட்ட வாழ்க்கை தனது பணியை எவ்விதத்திலும் பாதித்ததில்லை என சன்னா மரின் விளக்கமளித்தார்.
மேலும், இருண்ட மேகங்களுக்கு இடையே தெரியும் ஒளி போல, தனது பணிகளுக்கு இடையே சில கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் அவர் கூறினார். நாம் ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறோம் என்பதை விட, பணி நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதே மக்களுக்கு முக்கியம் என தான் நம்புவதாகவும் சன்னா மரின் குறிப்பிட்டார்.
எனினும் அவர் பங்கேற்ற விருந்தில் போதை மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக அடுத்த குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சன்னா மரின் போதை மருந்தை பயன்படுத்தினாரா என்பதை அறிய பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில், அவர் எவ்வித போதை மருந்தையும் பயன்படுத்தவில்லை எனத் தெரியவந்தது.
இந்த, சர்ச்சையே இன்னும் முடியாத நிலையில் மற்றோரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சன்னா மரின். இந்த முறை அவர் எதுவும் செய்யாவிட்டாலும், அவரது தோழிகள் எடுத்த புகைப்படம் ஒன்று, சன்னா மரினுக்கு வினையாய் மாறியுள்ளது. அவரது இரு தோழிகள் அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து டிக் டாக்கில் வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்தை வெளியிட்டவர் மிஸ் பின்லாந்து போட்டியில் கலந்து கொண்டவர் ஆவார். அந்த புகைப்படத்தில் சன்னா மரின் இல்லை என்றாலும், அவரது வீட்டில் எடுக்கப்பட்டதால், இந்த புகைப்படம் சர்ச்சையாகி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்னா மரின், அப்புகைப்படம் தனது வீட்டில் தான் எடுக்கப்பட்டதாகவும், அப்புகைப்படத்திற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளார்.
சன்னா மரின் தான் வகிக்கும் பதவிக்கு ஏற்ப பொதுவெளி நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், தனிப்பட்ட வாழ்க்கையைக் கணக்கில் கொண்டு ஒருவரின் பொது வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது எனவும், சன்னா மரினுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.