எத்தியோப்பியாவில் கடந்த 2020ம் ஆண்டு எத்தியோப்பிய அரச படைகளுக்கும் ‘டிக்ரே’ எனப்படும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களுக்குமிடையிலான போர் ஆரம்பமானது.
மேற்படி போர் மூலம் ஏற்பட்ட மோசமான விளைவுகளையடுத்து சமாதான பேச்சு வார்த்தை மூலம் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிறிது கால அமைதிக்குப் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் இரண்டு தரப்புக்களும் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்து போரை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில் மேற்படி போர் சூழல் குறித்து அறிக்கை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ‘அன்ரனி குட்டேரியஸ்’, “எத்தியோப்பியா பொருளாதாரத்தில் மிகவும் கீழ் நிலையில் இருக்கின்றது. மக்கள் உணவு பஞ்சத்தினால் வாடுகின்றார்கள். இதன் மத்தியில் தற்போது மீண்டும் ஆரம்பித்திருக்கும் போர் நினைக்க முடியாத அழிவுகளை ஏற்படுத்தப் போகின்றது.
எத்தியோப்பியாவில் ஏற்கனவே இடம்பெற்ற போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
தற்போது போர் நடைபெறும் பிராந்தியத்தில் சுமார் 6 மில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களில் சுமார் 40 வீதமான மக்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே மேற்படி போரை உடனடியான முடிவுக்கு கொண்டு வர இரண்டு தரப்புக்களும் உடன்பட வேண்டும். பேச்சு வார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த ஐ.நா உட்பட பல ஒன்றியங்கள் ஆர்வமாக இருக்கின்றன”. என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ‘குட்டேரியஸ்’ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.