கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குழந்தைகள் மத்தியில் வேகமாக பரவி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக குழந்தைகள் நல மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், உடல்வலி, இருமல், சளி ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னர் , சளியானது கொவிட்-19 உடன் தொடர்புடையதாக இருந்த போதிலும், தற்போது பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் மத்தியில் இது எளிதில் பரவக்கூடியது என்பதால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தவறாமல் கைகளை கழுவ வேண்டும் என்றும் குறிப்பாக வகுப்பறைகள், முன்பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எவருக்கும் அதிகளவான இயற்கையான திரவங்கள், பராசிட்டமோல் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காய்ச்சலைக் குறைக்க வெதுவெதுப்பான நீரையும் பயன்படுத்தலாம் என்றும், ஆனால் யாராவது சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.