நாட்டினை காப்பாற்ற வக்கில்லை, நாட்டில் உணவுக்கு வழி இல்லை, இவ்வாறான சூழ்நிலையில் நிலப்பறிப்பினையும், பௌத்த மத திணிப்பினையும் மேற்கொள்கிறார்கள் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் குற்றம் சாட்டியுற்றார்.
குறுந்தூர் மலையில் இன்று புத்தர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குருந்தூர்மலையின் உச்சியிலும் அடிவாரத்திலும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அடிவாரத்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் மூவரை பொலிஸார் கைது செய்து வைத்துள்ளனர்.
சிங்கள பேரினவாத மக்களை தமிழ் மக்கள் மலையின் உச்சிக்கு செல்வதை மறித்துள்ளார்கள். அத்துடன் பிக்குகளையும் போக விடாமல் மறுத்துள்ளனர். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், விவசாய அமைச்சு உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் மக்கள் என ஆகியோர் தடுத்துள்ளோம்.
தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் இராணுவத்தினர் ஆகியோர் நின்ற போதும் போக விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளோம்.
மத அழிப்பினை ஏற்படுத்துவதுடன், பௌத்த மத திணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்துக்களின் அடையாளங்களை அழித்துள்ளார்கள்.
2021ஆம் ஆண்டளவில் குருந்தூர்மலை கோவிலின் சூலங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொலிஸிடம் முறைப்பாடு செய்திருந்தோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அத்துடன் இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கின்ற வேளையில், இது அனைத்தையும் மீறி மக்கள் உணவின்றி தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் இப்படியான காணி பறிப்புக்களும், பௌத்த திணிப்புமாக அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது. இதனை உலகம் பார்க்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கையாகும்.
நாட்டினை காப்பாற்ற வக்கில்லை, நாட்டில் உணவுக்கு வழி இல்லை, மக்கள் பட்னி, இவ்வாறான சூழ்நிலையில் நிலப்பறிப்பினையும், பௌத்த மத திணிப்பினையும் மேற்கொள்கிறார்கள்.
இந்த புத்தர் சிலை பிரதிஷ்டையினை நிறுத்தி உள்ளார்கள் என பொலிஸார் எமக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்கள், இருந்த போதும் இதில் எமக்கு நம்பிக்கை இல்லை, அதனால் இங்கேயே இருக்கிறோம்.
தமிழர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் வயிற்றுப்பசிக்கே போராடுவதாக உள்ளது. ஒன்றுமே செய்ய இயலாத அரசாங்கத்தை வைத்துக்கொண்டு அரசாங்கம் திண்டாடிக்கொண்டு இருக்கிறது.
எங்களை எங்கள் தமிழர் தாயகத்தில் வாழ விடுங்கள். இந்த போராட்டத்தில் உணவுகளை மறித்து வைத்திருக்கிறார்கள், சாப்பிடவும் முடியாமல் குடிக்க தண்ணீரும் இல்லாமல் இருக்கிறோம்.
சிங்கள மக்களை எதிர்க்கவில்லை, இனப்போக்குடைய சிங்கள மக்களையே எதிர்க்கின்றோம் என தெரிவித்தார்.