Friday, November 15, 2024
HomeLatest Newsஇலங்கையில் ​தேங்கிக்கிடக்கும் இரட்டை பிரஜா உரிமை விண்ணப்பங்கள்

இலங்கையில் ​தேங்கிக்கிடக்கும் இரட்டை பிரஜா உரிமை விண்ணப்பங்கள்

இலங்கையில் இரட்டைப்பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடப்பதாக நாடாளுமன்ற குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற பொது கணக்குகள் குழு (கோபா) இன்று மேற்கொண்ட விசாரணையின் போது இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைக்கு 22,388க்கும் மேற்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான விண்ணப்பங்கள் பல்வேறு காரணிகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அவை கடந்த 2018 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியில் கிடைக்கப்பெற்றவையாகும்.இவற்றில் 10077 விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

பணம் செலுத்துவதில் தாமதம், பாதுகாப்பு விசாரணை அறிக்கை தாமதம், ஆவணங்களில் சிறு குறைபாடுகள், பெருந்தொகையான விண்ணப்பங்களை ஒரே தடவையில் அமைச்சரின் கையெழுத்துக்காக சமர்ப்பிக்கும் போது கைச்சாத்திடுவதில் ஏற்படும் தாமதம், போன்ற விடயங்கள் காரணமாகவே குறித்த இரட்டைப் பிரஜாவுரிமை விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே இலங்கையராக இருந்து வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்கான விண்ணப்பங்களும் இவ்வாறு தேங்கிக் கிடக்கின்றன.

குறித்த விடயங்களை கவனத்திற்கொண்ட நாடாளுமன்ற பொது கணக்குகள் நிலைக்குழு இரட்டைப் பிரஜாவுரிமை விண்ணப்பங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

Recent News