இன்றைய தினம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மிகவும் கோலாகலமாக 126ஆவது மலர் கண்காட்சி ஆரம்பமாகின்றது.
எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த மலர் கண்காட்சியை காண இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் கூடுகின்றார்கள்.இந்த மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான சுமார் 5 இலட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாகத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால் மலர் கண்காட்சி மற்றும் பழ கண்காட்சி மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி ஆகியவை மட்டும் இந்தாண்டு நடைபெறுகிறது.பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா, அஜிரேட்டம், இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு என பல்வேறு வகையான செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளது.சுமார் ஒரு இலட்சம் ரோஜா மலர்கள் மூலம் பிரம்மாண்ட ஆக்டோபஸ், டிஸ்னி வோர்ல்டு என 10 வகையான அலங்காரங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தவிர அலங்கார வளைவுகள், ரங்கோலி, வனவிலங்குகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முறை அதிகமான பார்வையாளர்கள் வருகை எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், இ பாஸ் திட்டம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தச் சூழலில் மலர் கண்காட்சி இன்று தொடங்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.