தைவான் நீரிணையில் அமைதியைக் கட்டிக்காப்பதற்கும் தைவான் சுதந்திரமாக இருப்பதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானைச் சுற்றித் தான் மேற்கொண்ட மூன்று நாள் இராணுவப் பயிற்சிகள் நிறைவடைந்த பின்னரே சீனா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவான் நீரிணையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காப்பதற்கு, சுதந்திரம் பெற தைவான் கடைப்பிடிக்கும் எல்லா வகையான பிரிவினை வாதப் போக்குகளையும் எதிர்க்கவேண்டும் என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.
தைவானை இராணுவ ரீதியாக முற்றுகையிடும் பயிற்சிகளை சீனா மேற்கொண்டதுடன், அனைத்து பயிற்சிகளும் வெற்றிகரமாக முடிந்ததாகவும், பல்வேறு பிரிவுகளின் ஆற்றல் முழுமையாகச் சோதிக்கப்பட்டது என்றும் சீன இராணுவம் கூறியுள்ளது.
தைவான் அதிபர் சாய் இங்-வென், அண்மையில் அமெரிக்காவில் அந்நாட்டின் நாடாளுமன்ற நாயகர்
கெவின் மெக்கார்த்தியைச் சந்தித்த பின்னர் தைவான் சுற்றுப்புறத்தில் மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக சீனா அறிவித்திருந்தது.
முன்னதாக அமெரிக்க நாடாளுமன்ற நாயகராகப் பதவி வகித்த நேன்சி பெலோசி சென்ற ஆண்டு தைவானுக்குப் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து தைவான் சுற்றுப்புறத்தில் சீனா இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது.
இம்முறை சீனா மேற்கொண்ட பயிற்சிகளிலும் அதே அளவு வீரியம் இருந்ததாக தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசஃப் வூ தெரிவித்துள்ளார்.