பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகளுக்கும் வெளிநாடுகளில் கேள்வி ஏற்பட்டால் அவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிரான தென்னைகளிற்கு மிகப்பெரிய சேதங்களை டோக் மக்காக்கள், குரங்குகள் மற்றும் ராட்சத அணில்கள் ஏற்படுத்துகின்றன.
2022 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் 93 மில்லியன் தேங்காய்கள் குரங்குகள், மக்காக்கள் மற்றும் ராட்சத அணில்களால் அழிக்கப்பட்டுள்ளன என்பதுடன் 2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 180-200 மில்லியன் தேங்காய்களாக உயரக்கூடும் என்றும் அறிக்கைகள் வெளிக்காட்டி நிற்கின்றது.
இந்த விலங்குகளினால் ஏனைய பயிர்களும் பாதிக்கப்படுவதாகவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குரங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை அமைச்சரினால் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும், சீனாவுக்கு மாத்திரமன்றி அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் குரங்குகள் ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வேளை குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் சீனாவில் உள்ள 1,000 உயிரியல் பூங்காக்களுக்கு இவை வழங்கப்படும் என்றும், அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.